தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)
விண்வெளி தொடர்பான ஐக்கிய அமெரிக்க அரசின் நிறுவனம் / From Wikipedia, the free encyclopedia
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் அல்லது நாசா (National Aeronautics and Space Administration அல்லது NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.[5] இது 1958 ஜூலை 29 அன்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது; இது இதற்கு முன் வானூர்தியியல் ஆராய்ச்சிகளுக்காக இருந்த, தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவைக் (நாகா) கலைத்து அதன் வடிவில் நிறுவப்பட்டது. இதன் ஆண்டு வரவு செலவு, 2012 இல் $17.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக முத்திரை குறிக்கோள்: அனைவரின் நலனுக்காக[1] | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | சூலை 29, 1958; 65 ஆண்டுகள் முன்னர் (1958-07-29) |
முன்னிருந்த அமைப்பு | |
ஆட்சி எல்லை | அமெரிக்க அரசு |
தலைமையகம் | வாஷிங்டன், டி. சி. |
பணியாட்கள் | 18,800+[3] |
ஆண்டு நிதி | US$17.8 பில்லியன் (FY 2012)[4] |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | nasa.gov |
பிப்ரவரி 2006-லிருந்து விண்வெளி ஆய்வு, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வானூர்தியியல் ஆராய்ச்சிகளில் எதிர்காலத்துக்கான முன்னோடியாக இருத்தல் என்பது நாசாவின் தாரக மந்திரமாகவுள்ளது. செப்டம்பர் 14, 2011 அன்று, புதிய விண்வெளி ஏவுத் தொகுதியின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது; இதன் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இதுவரை செல்லவியலாத தொலைவுகளுக்கெல்லாம் செல்லவியலும் எனவும், எதிர்காலத்தில் மனிதர் செல்லும் விண்வெளி ஆய்வுகளுக்குப் புதுபெரும் தொடக்கமாக இருக்குமெனவும் நாசா அறிவித்துள்ளது.
அக்டோபர் 1 1958 அன்று செயல்படத் தொடங்கிய இவ்வமைப்பு, அன்றிலிருந்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுகளைச் செய்துவருகிறது. குறிப்பாக அப்பல்லோ திட்டம், விண்ணாய்வகம் (Skylab) எனும் விண்வெளி நிலையம், விண்ணோடத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு பலவிதங்களில் ஆதரவளித்துவருகிறது, ஓரியான் பல்நோக்க குழு வாகனம் மற்றும் வணிகரீதியிலான குழு மேம்பாடு போன்ற திட்டங்களை முன்னெடுத்துச் செய்துவருகிறது. மேலும் ஆளற்ற விண்பயண ஏவுதல்கள் அனைத்தையும் இதுவே கண்காணிக்கிறது.
புவி அவதானிப்புத் தொகுதி மூலம் புவியை மேலும் புரிந்துகொள்ளுதல், அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் பரிதியியற்பியல் ஆராய்ச்சித் திட்டத்தின் கீழ் பரிதியியற்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், சூரியக் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றியும் ஆளற்ற விண்ணுலவிகள் அனுப்பி ஆராயந்தறிதல், பெரு வெடிப்புக் கோட்பாடு போன்ற வானியற்பியல் கோட்பாடுகளை ஆராய்வது போன்ற பணிகளை நாசா செய்துவருகிறது. மேலும் இவ்வமைப்பு கண்டறியும் தரவுத்தொகுப்புகளைப் பலநாடுகளின் அமைப்புகளோடும் பங்கீடும் செய்கிறது. விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.