சூரியக் குடும்பம்
சூரியனின் குடும்பத்தின் அமைப்பு. / From Wikipedia, the free encyclopedia
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஓர் அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாகச் சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்புப் பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாகச் சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
கதிரவ அமைப்பில் உள்ள எட்டுக் கோள்கள் (தொலைவுகள் அளவீட்டிற்கில்லை) | |
வயது | 4.568 பில்லியன் ஆண்டுகள் |
---|---|
அமைவிடம் | உள் மீனிடை மேகம், உட் குமிழி, ஓரியன் கை, பால் வழி |
தொகுதித் திணிவு | 1.0014 கதிரவ நிறைகள் |
அண்மைய விண்மீன் | புரோக்சிமா செண்ட்டாரி (4.22 ஒஆ) |
அறியப்பட்டுள்ள அண்மைய கோள் தொகுதி | புரோக்சிமா செண்ட்டாரி அமைப்பு (4.37 ஒஆ) |
புறக் கோள்களின் அரைப்பேரச்சு (நெப்டியூன்) | 4.503 பில்லியன் கிமீ (30.10 வாஅ) |
கைப்பர் பட்டைல் இருந்து உள்ள தொலைவு | 50 வாஅ |
கோள்களின் எண்ணிக்கை | 8 புதன், வெள்ளி (கோள்), புவி, செவ்வாய் (கோள்), வியாழன் (கோள்), சனி (கோள்), யுரேனசு, நெப்டியூன் |
அறிந்த குறுங்கோள்கள் | 5 (IAU) செரசு, புளூட்டோ, அவுமியா, மேக்மேக், ஏரிசு நூற்றுக்கும் அதிகமான பொருட்கள்[1] |
அறிந்த இயற்கைத் துணைக்கோள்கள் | 406 (இவற்றில் 176 கோள்களினவை[2] மற்றும் 230 சிறு கோள்கள்[3]) |
அறிந்த சிறுகோள்கள் | 600,642 (2012-12-13 இன் படி)[2] |
அறிந்த வால்வெள்ளிகள் | 3,179 (2012-12-13 இன் படி)[2] |
அறியப்பட்ட வட்ட செயற்கைக்கோள்கள் | 19 |
Inclination of invariable plane to the galactic plane | 60.19° (சூரியவீதிசார்) |
பால்வெளி மையத்தில் இருந்து உள்ள தொலைவு | 27,000±1,000 ஒஆ |
சுற்றுவட்ட வேகம் | 220 கிமீ/செ |
சுற்றுவட்டக் காலம் | 225–250 Myr |
அலைமாலை வகை | G2V |
பனிக்கோடு | ≈5 வாஅ[4] |
கதிரவக் கோள எல்லையில் இருந்து உள்ள தொலைவு | ≈120 வாஅ |
மலைக் கோள ஆரம் | ≈1–2 ஒஆ |
சுமார் 460 கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு மிகப்பெரிய மூலக்கூறு மேகத்தில் ஏற்பட்ட ஈர்ப்புவிசைச் சுருக்கம் காரணமாக கதிரவ அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் எடையில் பெரும்பகுதியைக் கதிரவனே கொண்டுள்ளது. அதற்கடுத்து மிக அதிக எடை கொண்டது வியாழன் கோளாகும். புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் ஆகிய நான்கு உட்கோள்கள் (Inner Planets) , புவியொத்த கோள்கள் (Terrestrial Planets) என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக பாறைகள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றால் உருவானவையாகும். ஏனைய நான்கு புறக்கோள்களும் புவியொத்த கோள்களை விட நிறைமிக்கனவாகும். அவற்றில் மிகப்பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி போன்றவை பெரும்பாலும் ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் வளிமப் பெருங்கோள்கள் (Gas Giants) என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் போன்றவை மீதேன், அமோனியா போன்ற உயர் உருகு நிலை கொண்ட பொருட்களைக் கொண்டுள்ளதால் பனிப் பெருங்கோள்கள் (Ice Giants) என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்தும் தனித்தனி நீள்வட்ட சுற்றுப்பாதைகளில் (Orbital path) கதிரவனைச் சுற்றிவருகின்றன.
கதிரவ அமைப்புச் சிறு பொருட்களையும் கொண்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையே அமைந்துள்ள சிறுங்கோள் பட்டை அகக்கோள்களைப் போல் உலோகங்கள் மற்றும் தனிமங்களையே பெரும்பாலும் கொண்டுள்ளது, இதில் சியரீசு குறுங்கோள் அமைந்துள்ளது. பனிக்கட்டிகளால் உருவான கைப்பர் பட்டை நெப்டியூனின் வட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதில் புளுட்டோ, அவுமியா, மேக்மேக் மற்றும் ஏரிஸ் ஆகிய குறுங்கோள்கள் அமைந்துள்ளன. இந்த இரு பகுதிகளைத் தவிர, பல்வேறு சிறு சிறு பொருட்களும் தடையின்றிப் பயணித்து வருகின்றன. ஆறு கோள்களையும், குறைந்தபட்சம் நான்கு குறுங்கோள்களையும் பல சிறு பொருட்களையும் துணைக்கோள்கள் சுற்றி வருகின்றன. இவை நிலவுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. புறக்கோள்கள் ஒவ்வொன்றையும் தூசு மற்றும் சிறு பொருட்களால் ஆன ஒரு கோள் வளையம் சுற்றியுள்ளது.
புதன்: சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ள பாறைக்கோள்தான் புதன் ஆகும். இது பகலில் மிக அதிக வெப்பத்துடனும் இரவில் அதிகக் குளிருடனும் காணப்படும். புதன் மிகவும் மங்கலாகவும், சிறியதாகவும் காணப்படுவதால், வெறும் கண்ணால் பார்ப்பதைவிட ஒரு தொலைநோக்கியால் அதை நன்கு காண முடியும். அதை எப்போதும் கிழக்கு அல்லது மேற்குத் திசையின் கீழ்வானத்தில் மட்டுமே காண இயலும். புதனுக்கு இயற்கை நிலவுகள் கிடையாது.
வெள்ளி : வெள்ளி கோள் சூரியனுக்கு நெருக்கமாக உள்ள இரண்டாவது கோள் ஆகும். இது கரியமிலவாயு, கந்தக வாயுக்கள் மற்றும் இதர வாயுக்களால் ஆன அடர்த்தியான மேகங்களைக் கொண்டுள்ளதால் பசுங்குடில் விளைவினால் மிக அளவிலான வெப்பநிலையைக் கொண்டு உள்ளது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் கோளை விட மிக அதிக வெப்பமான கோள் இதுவே ஆகும். இது பூமியிலிருந்து அதிகாலை மற்றும் அந்தி மாலையில் முறையே கிழக்கு மற்றும் மேற்கு வானத்தில் வெறும் கண்களாலேயே காணலாம். இதனால் இக்கோளினை விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வெள்ளிக் கோளுக்கும் இயற்கை நிலவுகள் கிடையாது.
பூமி: சூரிய மண்டலத்திலுள்ள கோள்களிலேயே நாம் வாழும் பூமியில் மட்டும்தான் உயிர்வாழத் தகுதியான தழல் உள்ளது. சூரியனிலிருந்து சரியான தொலைவில் அது உள்ளதால், சரியான வெப்பநிலை, நீர் ஆதாரம், சரியான வளிமண்டலம் மற்றும் ஓசோன் படலம் ஆகியவற்றை பூமி கொண்டுள்ளது. இவையனைத்தும் உள்ளதால்தான், பூமியில் உயிர்கள் தொடர்ந்து வாழ்வதென்பது சாத்தியமாகின்றது. பூமியின் மீதுள்ள நீர் மற்றும் நிலப் பகுதிகளின் மீது ஒளி எதிரொளிப்பதால், விண்ணிலிருந்து பார்க்கும்போது பூமி நீலம் கலந்த பச்சை நிறத்துடன் காணப்படும்.
செவ்வாய்: புவியின் சுற்றுப்பாதைக்கு வெளியில் அமைந்துள்ள முதல் கோள் செவ்வாய் ஆகும். இது சற்றே சிவப்பு நிறத்தில் காணப்படுவதால், இது சிவப்புக்கோள் என அழைக்கப்படுகிறது. இதற்கு டீமோஸ் மற்றும் போபோஸ் எனப்படும் இரு இயற்கைத் துணைக்கோள்கள் உள்ளன.
வியாழன்: வியாழன் கோளானது, பெருங்கோள் என்று அழைக்கப்படுகின்றது. சூரிய குடும்பத்தில், உள்ள கோள்ககளில் மிகப்பெரியது இதுவே. (புவியை விட 11 மடங்கு பொருன்மைைைலும் , 318 மடங்கு அதிக எடை கொண்டது). இதற்கு 3 வளையங்களும் 65 நிலவுகளும் உள்ளன. இதன் நிலவான கானிமீடு என்ற நிலவுதான் சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவாகும்.
சனி: வளையங்களுக்குப் பெயர்போன சனி கோள், மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது. வெளிப்புற சூரியமண்டலத்தில் காணப்படும் இக்கோளானது வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரு வாயுக்கோளாகும். குறைந்தபட்சம் சனியில் 60 நிலவுகள் உள்ளன. டைட்டன் என்ற நிலவே அதில் பெரியது ஆகும். நம் சூரிய மண்டலத்தில் மேகங்களுடன் கூடிய ஒரே நிலவு இதுவாகும். சனியின் அடர்த்தி மிகவும் குறைவாக உள்ளதால் (புவியை விட 30 மடங்கு குறைவு) இந்த கோள் கனமற்றது.
யுரேனஸ்: யுரேனஸ் ஒரு குளிர்மிகு வாயுப் பெருங்கோளாகும். பெரிய தொலைநோக்கியின் மூலமாகவே இதைக் காணஇயலும். இது மிகவும் சாய்ந்த சுழல் அச்சைக் கொண்டுள்ளது. அதனால் இது உருண்டோடுவது போல் தெரிகின்றது. இதன் அசாதாரண சாய்வின் காரணமாக இங்கு கோடை காலமும், குளிர்காலமும் மிக நீண்டு இருக்கும், ஒவ்வொன்றும் 42 ஆண்டுகளாக உள்ளன.
நெப்டியூன்: இக்கோளானது பச்சை நிற விண் மீன் போன்று காட்சியளிக்கும். சூரியனிலிருந்து எட்டாவதாக உள்ள இந்தக் கோள் மிகவும் காற்று வீசக்கூடிய கோளாகும். 248 ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது. இந்த நிலை 20 ஆண்டுகளுக்குத் தொடர்கிறது. இதற்கு 13 நிலவுகள் உள்ளன, அதில் டிரைட்டான் என்ற நிலவே பெரியதாகும். சூரிய மண்டலத்தில் கோளின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுற்றும் ஒரே நிலவு டிரைட்டான் ஆகும்.