செசில் ரோட்சு
From Wikipedia, the free encyclopedia
செசில் ஜான் ரோட்சு (Cecil John Rhodes) (5 சூலை 1853 – 26 மார்ச்சு 1902)[1] தென்னாப்பிரிக்காவில் சுரங்கத் தொழிலில் பெருவணிகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய பிரித்தானிய வணிகர். 1890இலிருந்து 1896 வரை கேப் குடியேற்றத்தின் பிரதமராகவும் பணியாற்றியவர். பிரித்தானியப் பேரரசுவாதத்தில் மிகுந்த பற்றுடைய ரோட்சு தமது பிரித்தானிய தென்னாப்பிரிக்க கம்பனி மூலம் உரோடீசியா பகுதியை (தற்போதைய சிம்பாப்வேயும் சாம்பியாவும்) உருவாக்கினார்; 1895இல் இவரது பெயரையே கம்பனி இப்பகுதிக்குச் சூட்டியது. தென்னாப்பிரிக்காவின் ரோட்சு பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது. இவரது சொத்துக்களின் வருமானத்தைக் கொண்டு ரோட்சு படிப்புதவி நிறுவப்பட்டுள்ளது. பிரித்தானிய ஆட்சிப்பகுதிகள் வழியாகவே கேப்பிலிருந்து கெய்ரோ வரை தொடருந்து அமைப்பு நிறுவுவதை தமது கனவாகக் கொண்டு பெரிதும் முயற்சிகள் எடுத்தார்.
ரைட் ஆனரபிள் செசில் ரோட்சு முனைவர், பொதுச்சட்டம் | |
---|---|
ரோட்சு, c. 1900 | |
7வது கேப் குடியேற்றத்தின் பிரதமர் | |
பதவியில் 17 சூலை 1890 – 12 சனவரி 1896 | |
ஆட்சியாளர் | ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா |
ஆளுநர் | என்றி லோக் வில்லியம் கேமரூன் எர்குலெசு இராபின்சன் |
முன்னையவர் | ஜான் கார்டொன் இசுப்ரிகு |
பின்னவர் | ஜான் கார்டொன் இசுப்ரிகு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செசில் ஜான் ரோட்சு (1853-07-05)5 சூலை 1853 பிஷப்சு இசுடார்ட்போர்டு, எர்ட்போர்டுசையர், இங்கிலாந்து, ஐ.இரா |
இறப்பு | 26 மார்ச்சு 1902(1902-03-26) (அகவை 48) [மியூசென்பெர்கு, பிரித்தானிய கேப் குடியேற்றம் (தற்போது தென்னாப்பிரிக்கா) |
இளைப்பாறுமிடம் | வேர்ல்ட்சு வியூ, மட்டோப்போசு ஹில்சு, தெற்கு உரொடீசியா (தற்போது சிம்பாப்வே) 20°25′S 28°28′E |
தேசியம் | பிரித்தானியர் |
உறவுகள் | அருள்திரு பிரான்சிசு வில்லியம் ரோட்சு (தந்தை) லூசியா பீகாக் ரோட்சு (தாய்) பிரான்சிசு வில்லியம் ரோட்சு(உடன்பிறப்பு) |
முன்னாள் கல்லூரி | ஓரியல் கல்லூரி, ஆக்சுபோர்டு |
வேலை | வணிகர் அரசியல்வாதி |
பங்கு பாதிரியாரின் மகனாகப் பிறந்த ரோட்சு இளமையில் மிகவும் உடல்நலம் குன்றியவராக இருந்தார். அவருக்குப் பதினேழு அகவைகள் நிறைந்தபோது தென்னாப்பிரிக்காவிற்கு அவர் அனுப்பப்பட்டார்; தென்னாப்பிரிக்காவின் வானியல் சூழல் அவரது உடல்நலத்தை மேம்படுத்தும் என அவரது குடும்பத்தினர் கருதினர். 1871ஆம் ஆண்டில், தமது 18ஆம் அகவையில், கிம்பர்லியில் வைர வணிகத்தில் ஈடுபட்டார். அடுத்த இருபதாண்டுகளில் உலகின் வைர வணிகத்தில் கிட்டத்தட்ட முற்றுரிமைநிலை எட்டினார். 1888இல் நிறுவப்பட்ட இவரது தே பீர்ஸ் வைர நிறுவனம் 21ஆம் நூற்றாண்டிலும் தனது வல்லாண்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. ரோட்சு 1880இல் நன்னம்பிக்கை முனை நாடாளுமன்றத்தில் கால் பதித்தார்; அடுத்த பத்தாண்டுகளில் பிரதமராகப் பொறுப்பேற்றார். 1890களின் துவக்கத்தில் உரோடீசியா உருவாவதை மேற்பார்வையிட்ட வந்த ரோட்சு, 1896இல் டிரான்சுவாலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக பதவி விலக நேரிட்டது. தமது 48ஆம் அகவையில், 1902ஆம் ஆண்டில் உயிரிழந்த ரோட்சு தற்போதைய சிம்பாப்வேயிலுள்ள மட்டோப்போசு ஹில்சில் புதைக்கப்பட்டார்.
ரோட்சின் அரசியலிலும் வணிக முயற்சிகளிலும் ஆங்கிலோ-சாக்சன் இனத்தினரே சாதனை படைக்கப் பிறந்தவர்கள் என்ற மனச்சார்பு எதிரொலித்தது; அவரது உயில் கூட "உலகின் முதல் இனத்தினர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[2] மேலும் "உலகின் பெரும்பகுதியை நாம் கையகப்படுத்தினால் மனித குலத்திற்கு அது நன்மை பயக்கும்" [2] என்று நம்பிய ரோட்சு தீவிரமாக குடியேற்றவாதத்தை ஆதரித்தார். பிரித்தானியப் பேரரசின் ஒவ்வொரு அங்கமும் தன்னாட்சி பெற்று இலண்டனில் அமைந்த ஒற்றை நாடாளுமன்றத்தால் ஆளப்படும் கனவை முன்வைத்தார். கறுப்பினத்தவரை காட்டுமிராண்டிகளாக சித்தரித்த ரோட்சு அவர்களை அரசியலில் ஓரங்கட்டும் முயற்சிகளின் மையமாக விளங்கினார். இதனால் தற்கால விமரிசகர்கள் இவரை வெள்ளையின ஆதிக்கவாதியாக வகைப்படுத்துகின்றனர்.