தென் அமெரிக்கா
கண்டம் / From Wikipedia, the free encyclopedia
தென் அமெரிக்கா ஒரு மேற்கு அரைக்கோளத்தில் பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள கண்டம். இக்கண்டத்தின் சிறுபகுதி வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களின் துணைக்கண்டம் என்றும் கருதப்படுகிறது.[2] மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இவ்வாறு தெற்கு அரைக்கோளத்தில் அமைந்த பிற பெரு நிலப்பகுதிகள் ஆகும்.
பரப்பளவு | 17,840,000 ச. கிமீ2 (6,890,000 ச. மை) |
---|---|
மக்கள்தொகை | 387,489,196 (2011, 5வது) |
மக். அடர்த்தி | ச. கிமீக்கு 21.4 (ச.மைலுக்கு 56.0) |
மக்கள் | தென் அமெரிக்கர், அமெரிக்கர்[1] |
நாடுகள் | 12 |
சார்பு மண்டலங்கள் | 3 |
மொழிகள் | மொழிகளின் பட்டியல் |
நேர வலயங்கள் | ஒ.அ.நே-2 முதல் ஒ.அ.நே-5 வரை |
மிகப்பெரிய நகரங்கள் | சாவோ பாவுலோ புவெனஸ் ஐரிஸ் ரியோ டி ஜனேரோ பொகோட்டா லிமா சான் டியேகோ கரகஸ் மெதெயின் பெலோ அரிசாஞ்ச் கலி |
தென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது.
இந்தக் கண்டத்தில் இறைமையுள்ள 12 நாடுகளும் – அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பரகுவை, பெரு, சுரிநாம், உருகுவை, மற்றும் வெனிசுவேலா – இரண்டு இறைமையற்ற பகுதிகளும் – பிரெஞ்சு கயானா, பிரான்சின் கடல்கடந்த ஆள்புலம், போக்லாந்து தீவுகள், பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலம் – உள்ளன. இவற்றைத் தவிர, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நெதர்லாந்தின் ஏபிசி தீவுகளும் தென் அமெரிக்காவின் அங்கமாகக் கருதப்படுகின்றன.
இக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.
பெரும்பாலான மக்கள் மேற்கு அல்லது கிழக்கு கடற்கரையோரங்களில் வசிக்கின்றனர்; உட்பகுதிகளிலும் தென்கோடியிலும் மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியிலும் அந்தீசு மலைத்தொடர் அமைந்துள்ளது; இதற்கு எதிராக, கிழக்குப் பகுதி மேட்டுப்பகுதிகளுடன் பரந்த ஆற்றுப் படுகைகளையும் கொண்டுள்ளது. இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக அமேசான், பரனா மற்றும் ஓரினோகோ உள்ளன. கண்டத்தின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது.
இந்தக் கண்டத்தில் பலதரப்பட்ட பண்பாட்டு, இனக் குழு மக்கள் வாழ்கின்றனர்; தென்னமெரிக்காவின் முதற்குடிகளைத் தவிர ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்ற அரசுகளின் தாக்கத்தால் பெரும்பாலான தென் அமெரிக்கர்கள் இலத்தீன் மொழிவழி தோன்றிய போர்த்துகேயம் அல்லது எசுப்பானியம் பேசுகின்றனர். இதனால், தென் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்க சமூகங்களும் நாடுகளும் மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை பின்பற்றுகின்றனர்.
30 degrees, 1800x1800 |