ஏஞ்சலினா ஜோலி
அமெரிக்க நடிகை (பிறப்பு 1975) / From Wikipedia, the free encyclopedia
ஏஞ்சலினா ஜோலி (இயற்பெயர் ஏஞ்சலினா ஜோலி வோய்ட் , பிறப்பு: ஜூன் 4, 1975) அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார்.[1]
ஏஞ்சலினா ஜோலி | |
---|---|
ஜோலி 2010 ல் சால்ட் திரைப்படத்தின் வெளியீட்டின் போது. | |
பிறப்பு | ஏஞ்சலினா ஜோலி வோய்ட் சூன் 4, 1975 (1975-06-04) (அகவை 48) லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்க |
பணி | நடிகை, இயக்குனர். |
செயற்பாட்டுக் காலம் | 1982; 1991–தற்போதும் |
துணைவர் | பிராட் பிட் (2005–தற்போதும்; 6 குழந்தைகள்) |
வாழ்க்கைத் துணை | ஜானி லீ மில்லர் (1996–1999) பில்லி பாப் தார்ன்டன் (2000–2003) |
பிள்ளைகள் | 6 |
1982 ஆம் ஆண்டில் வெளிவந்த லுக்கிங் டூ கெட் அவுட் என்கிற திரைப்படத்தில் குழந்தையாக, தனது அப்பா ஜோன் வோய்ட் உடன் தோன்றியதன் மூலம் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தாலும், குறைந்த முதலீட்டில் தயாரான சைபோர்க் 2 (1993) திரைப்படத்தின் மூலம் தான் அவரது பிரதான நடிப்பு வாழ்க்கை துவங்கியது. ஒரு பெரிய படத்தில் அவரது முதல் பிரதான பாத்திரம் என்பது ஹேக்கர்ஸ் (1995) திரைப்படத்தில் நிகழ்ந்தது. விமர்சனரீதியாக பாராட்டுப் பெற்ற வாழ்க்கை வரலாற்று திரைப்படங்களான ஜார்ஜ் வாலஸ் (1997) மற்றும் ஜியா (1998) ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்தார். அத்துடன் கேர்ள், இன்டர்ரப்டட் (1999) என்கிற குணச்சித்திரப் படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருதினை வென்றார். லாரா கிராப்ட்: டோம்ப் ரைடர் (2001) என்னும் காணொளி விளையாட்டு நாயகி லாரா கிராப்டாக அவர் தோன்றிய பின் ஜோலி பரந்த புகழைப் பெற்றார். அன்று முதல் இவர் ஆங்கிலத் திரையுலகின் மிகவும் அறியப்பட்ட மிகவும் அதிக ஊதியம் பெறும் நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.[2] மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் (2005) திரைப்படமும் குங் ஃபு பான்டா (2008) என்னும் அசைவூட்டத் திரைப்படமும் அவரது மிகப்பெரும் வர்த்தக வெற்றிப் படங்களாக அமைந்தன.[3]
ஜானி லீ மில்லர் மற்றும் பில்லி பாப் தோன்டான் ஆகியோரை விவாகரத்து செய்த பின், ஜோலி இப்போது நடிகர் பிராட் பிட் உடன் வாழ்ந்து வருகிறார். இந்த தம்பதியினர் உலகளவில் ஊடகங்கள் கவனம் ஈர்ப்பவர்களாய் திகழ்கின்றனர். ஜோலிக்கும் பிட்டுக்கும் மடோக்ஸ், பாக்ஸ், சகரா ஆகிய மூன்று தத்தெடுத்த குழந்தைகளும், ஷிலோ, க்னாக்ஸ், விவியென் ஆகிய மூன்று ரத்தவழி குழந்தைகளும் உள்ளனர்.