2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
2019 ஐசிசி துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2019 ICC Cricket World Cup) என்பது ஐசிசி நடத்திய 12-வது துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி ஆகும். 2019 மே 30 முதல் சூலை 14 வரை நடைபெற்ற இப்போட்டிகளை இங்கிலாந்தும் வேல்சும் இணைந்து நடத்தின.[1][2][3] 2019 சூலை 14 அன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இலார்ட்சில் நடைபெற்ற இறுதிப்போட்டியின் ஆட்டமும் சிறப்பு நிறைவும் சமனில் முடிந்ததைத் தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையிலான நான்குகள் விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
நாட்கள் | 30 மே – 14 சூலை |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்-சுழல், ஒற்றை வெளியேற்ற முறைகள் |
நடத்துனர்(கள்) | இங்கிலாந்து வேல்சு |
வாகையாளர் | இங்கிலாந்து (1-ஆம் தடவை) |
இரண்டாமவர் | நியூசிலாந்து |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 48 |
தொடர் நாயகன் | கேன் வில்லியம்சன் |
அதிக ஓட்டங்கள் | ரோகித் சர்மா (648) |
அதிக வீழ்த்தல்கள் | மிட்செல் ஸ்டார்க் (27) |
அலுவல்முறை வலைத்தளம் | அதிகாரபூர்வ இணையதளம் |
← 2015 2023 → |
2015 தொடரை ஏற்று நடத்த இங்கிலாந்தும் வேல்சும் பின்வாங்கியதை அடுத்து, 2019 உலகக்கிண்ணச் சுற்றை ஏற்று நடத்தும் உரிமை 2006 ஏப்ரலில் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவது ஆட்டம் இங்கிலாந்து, ஓவல் அரங்கிலும், இறுதி ஆட்டம் இலார்ட்சு அரங்கிலும் நடைபெற்றன. ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் நடைபெறுகின்றன. முன்னராக 1975, 1979, 1983, 1999 உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கு இடம்பெற்றன.
ஆரம்ப சுற்றில், 10 அணிகளைக் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வோர் அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதின. போட்டிகள் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. அயர்லாந்து, ஆப்கானித்தான் அணிகள் தேர்வு அணிகளாக 2017 சூன் மாதத்தில் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தேர்வு அணிகள் 10 இலிருந்து 12 ஆக அதிகரித்தன. ஆனால், இரண்டு தேர்வு அணிகள் 2019 உலகக்கோப்பையில் பங்குபெறவில்லை. அனைத்துத் தேர்வு அணிகளும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பைப் போட்டியாக 2019 போட்டி அமைந்தது.[4] அத்துடன் தேர்வு அணியல்லாத நாடுகள் எதுவும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பை போட்டியும் இதுவாகும்.