புரதப்படிவு நோய்
From Wikipedia, the free encyclopedia
புரதப்படிவு நோய் அல்லது பிறழ் புரதப்படிவு நோய் (Amyloidosis - அமிலோய்டோசிஸ்) என்பது ஒரு நோய்க்குழு ஆகும். இதில் அமிலோயிட் இழைகள் (Amyloid fibrils) என அழைக்கப்படும் ஓர் அசாதாரண புரதம் இழையங்களில் படிவதனால் நோய்க்குரிய நிலைகளை உருவாக்குகிறது.[4] இதில் பல வகைகள் உண்டு. நோய் அறிகுறிகள் அதன் வகையைப் பொறுத்து வேறுபடும். ஆனாலும் அறிகுறிகள் வரையறுத்துக் கூற முடியாததாகவும், தெளிவற்றதாகவும் இருக்கின்றன.[5] இவ்வறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, எடை இழப்பு, களைப்பு, நாக்கு தடித்தல், மூச்சு விடுவதில் சிரமம், சீரற்ற நெஞ்சுத்துடிப்பு நிற்கும்போது அல்லது அமரும்பொழுது ஏற்படும் குறை உடல் அழுத்தம், புற நீர்வீக்கம் (கால், பாதம் வீங்குதல்) போன்றவையும் அடங்கும்.[5]
புரதப்படிவு நோய் | |
---|---|
கண்களைச் சுற்றியுள்ள தோலின் கீழ் இரத்தக் கசிவுடன்(சிராய்ப்பு) AL அமிலாய்டோசிஸின் பாதிப்புள்ள முகம்.[1] | |
சிறப்பு | உட்சுரப்பியல், வாத நோய், இருதயவியல் |
அறிகுறிகள் | களைப்பு, எடையிழப்பு,கால்களில் வீக்கம், சுவாசக் கோளாறு, இரத்தக் கசிவு, உடல் அழுத்தக்குறை[2] |
வழமையான தொடக்கம் | 55–65 வயது[2] |
காரணங்கள் | மரபணு அல்லது பெறப்பட்டது.[3] |
நோயறிதல் | உயிரகச்செதுக்கு[2] |
சிகிச்சை | ஆதரவான பராமரிப்பு அடிப்படைக் காரணிக்கான சிகிச்சை, dialysis, உறுப்பு மாற்று[3] |
முன்கணிப்பு | சிகிச்சை மூலம் மேம்படுத்தப்படுகிறது.[3] |
நிகழும் வீதம் | ஆண்டுக்கு மில்லியன் மக்களில் 3–13 நபர்களுக்கு (AL amyloidosis)[2] |
இறப்புகள் | 1,000 த்தில் ஒருவர் (வளர்ந்த நாடுகளில்)[3] |
சுமார் 36 வெவ்வேறு வகையான புரதப்படிவு நோய்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட புரதத்தின் தவறான மடிப்பினால் ஏற்படுகின்றன.[6] இவற்றில் 19 குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருப்பவையாகவும் (localized), 14 வெவ்வேறு இடங்களில் பரவி (systemic) இருப்பவையாகவும், ஏனைய 3 இவ்விரு வகையிலும் அடங்குபவையாகவும் உள்ளன.[6] இப்படியான ஒழுங்கற்ற புரத உருவாக்கம் மரபியல் மாற்றங்களால் அல்லது சூழலியல் காரணிகளிலில் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம்.[3]