கொம்பு (உடற்கூறியல்)
சில விலங்குகளின் மண்டையில் வளர்ந்த ஆயுதம் / From Wikipedia, the free encyclopedia
கொம்பு (Horn (anatomy)) என்பது பல்வேறு விலங்குகளின் தலையில் நிரந்தரமாக உள்ள கூரான ஒரு உறுப்பு ஆகும். இதன் மையத்தில் உயிருள்ள எலும்பும் அதைச் சுற்றி நகமியம் மற்றும் பிற புரதங்களாலான உறைகளைக் கொண்டுள்ளது. சாதாரணமாக கொம்புகள் என்பவை மான் கொம்புகளிலிருந்து வேறுபட்டவை. மான் கொம்புகள் நிரந்தரமாக இருப்பவை அல்ல அவை அவ்வப்போது விழுந்து முளைப்பவை. ஆனால் பிற பாலூட்டிகளுக்கு உள்ள கொம்புகள் நிரந்தரமானவை. இந்தக் கொம்புகளானது முக்கியமாக அசைபோடும் விலங்குகள், இரட்டைப்படைக் குளம்பிகளில் குறிப்பாக மறிமான் மற்றும் போவிடே ( மாடு, ஆடு, மாட்டுக் குடும்பம் போன்றவை) குடும்பங்களுக்கு காணப்படுகின்றன. மாடுகளின் கொம்புகள் தோலடி இணைப்பு திசுக்களில் இருந்து (உச்சந்தலையில்) எழுகின்றன. பின்னர் அவை எலும்புடன் இணைகின்றன. [1]
கொம்புகள் பொதுவாக வளைந்த அல்லது முறுக்கிய வடிவத்தைக் கொண்டிருக்கும். பல விலங்கு இனங்களில், ஆண் விலங்குகளுக்கு மட்டுமே கொம்புகள் உள்ளன. கொம்புகள் பிறந்த உடனேயே வளர ஆரம்பிக்கின்றன. மேலும் விலங்குகளின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வளர்வனவாக உள்ளன (பிராங்ஹார்ன் மான்களைத் தவிர மற்றவை ஆண்டுதோறும் வெளிப்புற அடுக்கை உதிர்க்கும், ஆனால் மையத்திலுள்ள எலும்பைத் தக்கவைத்திருக்கும் ).