அரேபியக் குதிரை
From Wikipedia, the free encyclopedia
அரேபியக் குதிரை என்பது, அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய ஒரு குதிரை இனம் ஆகும். தனித்துவமான தலை வடிவத்தையும், உயர் வால் அமைவையும் கொண்ட அரேபியக் குதிரைகள், உலகின் மிக இலகுவாக இனங்காணத்தக்க குதிரை இனங்களுள் ஒன்று. இற்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பே தற்கால அரேபியக் குதிரைகளை ஒத்த குதிரைகள் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் மத்திய கிழக்கில் கிடைத்துள்ளதால் இது மிகப் பழைய குதிரை இனங்களுள் ஒன்றும் ஆகும். வரலாற்றுக் காலம் முழுவதிலும், போர், வணிகம் ஆகியவற்றினூடாக உலகம் முழுதும் பரவிய அரேபியக் குதிரைகள், பிற இனங்களின் வேகம், தாங்கும் ஆற்றல், மெருகு, எலும்பு வலிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகப் பயன்பட்டுள்ளது. இன்று, சவாரிக்காகப் பயன்படும் குதிரை இனங்கள் ஏறத்தாழ அனைத்திலும், அரேபியக் குதிரை இனத்தின் குருதிவழி உள்ளது.
ஒரு அரேபியக் குதிரை | |
மற்றொரு பெயர் | அரேபியன் |
---|---|
தோன்றிய நாடு | மத்திய கிழக்கில், குறிப்பாக அரேபியத் தீபகற்பத்தில் தோன்றியது. |
பண்புகள் | |
நிறம் | Bay, கறுப்பு, chestnut, அல்லது சாம்பல். குறைவாக சுத்த வெள்ளை, சாபினோ, அல்லது ரபிக்கானோ கோலங்கள். |
தனித்துவ அம்சங்கள் | நுணுக்கமாகச் செதுக்கியது போன்ற எலும்பமைப்பு, உள்வளைந்த வடிவம், வளைந்த கழுத்து, ஒப்பீட்டளவில் மட்டமான முதுகு, உயர்ந்த வால் அமைவு. |
இகியுவசு ஃபெரசு கபால்லசு |
அரேபியக் குதிரை இனம் பாலைவனக் காலநிலைப் பகுதியில் உருவாகியது. நாடோடிகளான பெதூன் மக்கள் இவற்றுக்குப் பெரு மதிப்புக் கொடுத்ததுடன், கள்வரிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது குடும்பக் கூடாரத்துக்கு உள்ளேயே அவற்றுக்கு இடம் வழங்குவதும் உண்டு. மனிதருடன் ஒத்துழைக்கத்தக்க இயல்புகளை உருவாக்குவதற்கான தெரிவு இனப்பெருக்கத்தினூடாக நல்ல பழக்க வழக்கம், விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறன், மகிழ்ச்சிப்படுத்துவதற்கான விருப்பு ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒரு இனம் உருவாகியது. சவாரி, போர் ஆகியவற்றுக்குத் தேவையான உயர்ந்த ஊக்கம், விழிப்புநிலை ஆகிய இயல்புகளும் அரேபியக் குதிரைகளுக்கு உள்ளன.
அரேபியக் குதிரை பல்திறன்களைக் கொண்ட ஒரு இனம். பந்தயச் சவாரித் துறையில் இவ்வினம் முன்னணியில் உள்ளதுடன், தற்காலத்தில் குதிரைச் சவாரி சார்ந்த பல்வேறு விளையாட்டுத் துறைகளிலும் போட்டியிடுகின்றது. உலகின் மிகவும் விரும்பப்படும் 10 குதிரை இனங்களுள் இதுவும் ஒன்று. இவ்வினம் தற்போது, ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், ஆசுத்திரேலியா, கண்ட ஐரோப்பா, தென்னமெரிக்கா, அவற்றின் தாயகமான மத்திய கிழக்கு உள்ளிட்ட உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றது.